பொதுவான தகவல்கள்
ஆம்ப்லயோபியா அல்லது “சோம்பலான கண்” எனப்படும் இந்நிலையில், கண் பார்வைக் குறைவு ஏற்படுகிறது.
- இதற்கான காரணங்கள் :
- கண்களின் ஒழுங்கின்மை அல்லது இரண்டு கண்களும் வெவ்வேறு திசைகளை நோக்குதல்
- இரண்டு கண்களுக்குள்ளும் பார்வைக் குறைவில் உள்ள வேற்றுமை (“ஸ்னெல்லென் விஷுவல் அக்யூட்டி சார்ட்”-ல் குறைந்தபட்சம் ஒரு கோடு வித்தியாசம்)
- சில சமயங்களில், ஒரு கண் கிட்டப்பார்வை, தூரப்பார்வை அல்லது காட்டராக்ட் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருந்தால் கூட ஆம்ப்லையோபியா உருவாகலாம்.
சோர்வான அல்லது வலிமை குறைந்த கண்ணிலிருந்து, மூளைக்குப் போதுமான அளவு தூண்டுதல் இல்லாத நிலையில், வலிமையான மற்றொரு கண் ஆதிக்கம் செலுத்துகிறது. இதனால் சோர்வான அல்லது ஆம்ப்லையோபியா-வினால் பாதிக்கப்பட்ட கண் மேலும் ஒடுக்கப்பட்டு, இறுதியில் பார்வை இழக்கிறது.
அறிகுறிகள்
ஆம்ப்லையோபியா-வினால் பாதிக்கப்பட்ட கண் பார்ப்பதற்கு நல்ல நிலையில் உள்ள கண் போன்றிருந்தாலும், அது முறைப்படி பயன்படுத்தப்படுவது இல்லை.
| நல்ல (அல்லது) சாதாரண கண் பார்வை | சோம்பலான கண்ணின் பார்வை |
 |
 |
- ஆம்ப்லையோபியா-வினால் பாதிக்கப்பட்ட கண்களை உடைய குழந்தைகளின் பெற்றோர், கீழ்கண்ட அறிகுறிகளை தங்கள் குழந்தைகளிடம் காண்பதுண்டு :
- கண்பார்வை வெவ்வேறு திசைகளை நோக்கி இருத்தல் அல்லது பார்வை தெளிவாக இருக்க, ஒரு கண்ணை மூடிக்கொண்டு பார்த்தல்
- மோசமான “விஷுவல் அக்யூட்டி”
- கண்களுக்கு சுமை
- தலைவலி
- மேலும் சில அறிகுறிகள் :
- கண்கள் ஒருங்கிணைந்து செயல்படாதிருத்தல் அல்லது பார்வை ஒரே இடத்தில் நிலைத்து இருத்தல்
- ஒரு கண் மூடியிருப்பதாக புகார் செய்து அழுதல்
- கண்மணியில் மேகமூட்டம் போன்று எற்படும் மறைப்பு(காட்டராக்ட்)
- மேற்புற கண் இமை கீழ்நோக்கி சாய்ந்து கண்பார்வையை மறைத்தல்(ப்டாஸிஸ்).
சிகிச்சை முறை
ஆரம்ப நிலையிலேயே அதாவது 5 வயதிற்குள் கண்டறியப்பட்டால், குணப்படுத்துவது எளிது. பாதிக்கப்பட்ட கண்ணுக்கு மூளையுடனான தொடர்பில் கோளாறு இருப்பதால், ஆரம்ப நிலையிலேயே சிகிச்சையைத் தொடங்குவது மிகவும் முக்கியம். குழந்தைகளின் மூளை வளர்ச்சி துரிதமாக இருப்பதால், ஆரம்ப காலத்தில் முழு மூளை வளர்ச்சி ஏற்படுவதற்குள் இந்த கோளாறைச் சரிப்படுத்துவது எளிதாகிறது.
பாதிக்கப்பட்ட குழந்தையின் கண்ணை பலப்படுத்துவதற்கு முன்பு, ஆம்ப்லையோபியா-விற்கான அடிப்படைக் காரணத்தை கண்டறிந்து முதலில் அதற்கு சிகிச்சை அளிப்பது அவசியம்.
- சில ஆரம்பகால சிகிச்சைகள் இவை :
- கண்களை ஒருநிலைப்படுத்த கண்ணாடி அணிதல்
- கண் தசைகளில் அறுவைசிகிச்சை
- கண்களுக்கு சில பயிற்சிகள்
- அதற்குப் பிறகு தரப்படும் சிகிச்சைகளில் சில :
- வலுவான கண்ணை சில வாரங்களுக்கு அல்லது மாதங்களுக்கு கட்டு போட்டு மறைப்பதன் மூலம், வலுவிழந்த கண்ணை மூளையுடன் சரிவர தொடர்பு கொள்ளச் செய்தல்.
- வலுவான கண்களுக்கு ‘அட்ரோபின்’ சொட்டுமருந்து அளிப்பதன் மூலம் அந்தக் கண்ணின் பார்வையை மங்கச் செய்து, வலுவிழந்த கண்ணை சரிவர இயங்கும்படி தூண்டுதல்.
தடுக்கும் முறைகள்
சிறிய வயதில் கண்டுபிடித்து குணப்படுத்துவதன் மூலம், ஆம்ப்லையோபியா-வைத் தடுக்கலாம். சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் கண் சரியான முறையில் வளர்ச்சி அடையாமல், பார்வை இழப்பு நேரிடலாம். பள்ளிக்குச் செல்லும் வயது வருவதற்கு முன்பு, குழந்தைகளின் கண்கள் பரிசோதனை செய்யப்பட வேண்டும்; அதற்குப் பிறகு தகுந்த இடைவெளியில் முறையான பரிசோதனை செய்தல் இந்நோயைக் கண்டுபிடிக்க உதவும்.