இவ்வுலகில், வண்ணம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. ஒளியானது ஒரு பட்டகத்திற்குள்(ப்ரிஸம்) புகுந்து வெளிவரும் போது, அது பல்வேறு வண்ணங்களைக் கொண்ட வர்ணப்பட்டியாகப்(ஸ்பெக்ட்ரம்) பிரிகிறது. இவற்றை ‘வானவில் வண்ணங்கள்’ என்கிறோம். வர்ணப்பட்டியின் ஒவ்வொரு பகுதியும் வெவ்வேறு அலைவரிசையில் இருப்பதால், நமக்கு வெவ்வேறு வண்ணங்கள் தோன்றுகின்றன. ஒவ்வொரு வண்ணமும் வெவ்வேறு அலைவரிசையில் உள்ளன; மனிதக் கண்ணும், மூளையும் இணைந்து இயங்கும் போது, பல்வேறு அலைவரிசைகளில் உள்ள ஒளி வண்ணமாக மாற்றப்படுகிறது. கண்ணில் உள்ள செல்கள் ஒளியை கிரகித்துக் கொண்டு, மூளைக்குச் செய்தி அனுப்புகிறது; இதன் விளைவாக வண்ணங்களைக் காண்பது சாத்தியமாகிறது.

கண்ணின் ஒரு பாகமான ‘ரெடினா’வில் இது ஆரம்பமாகிறது. ரெடினாவில் ‘ஃபோட்டோ ரிஸப்டார்ஸ்’ என்று ஒரு மில்லியன் செல்கள் உள்ளன. இவை இரு வகைப்படும் - சில கம்பி வடிவானவை, சில கூம்பு வடிவானவை. இவை, ஒளிக் கதிர்களை நரம்பியல் விசைகளாக மாற்றி, அவற்றைக் கண் நரம்புகள் மூலமாக மூளையின் ‘கார்டக்ஸ்’ என்ற பகுதிக்கு அனுப்புகிறது. கம்பி வடிவான செல்கள் பெரும்பாலும் ஒளியில் உள்ள கருப்பு, வெள்ளைத் தகவல்களை மட்டுமே மூளைக்கு அனுப்புகிறது; நாம் ஒரு இருண்ட அறைக்குள் நுழையும் பொது நமது கண்களை அந்த இருட்டுக்கு இணங்கச் செய்ய இது உதவுகிறது. கூம்பு வடிவான செல்கள், அதிக தீவிரமான ஒளிக்கதிர்களை பற்றிய தகவல்களை மூளைக்கு அனுப்பி, வண்ணங்களைக் காணச் செய்கிறது. கூம்பு வடிவான செல்கள் மூன்று வகையானவை - இவை குறைவான, அதிக நீளமில்லாத மற்றும் நீண்ட அலைவரிசையுடைய ஒளிக்கதிர்களை கிரகிக்கக்கூடியவை (சிகப்பு, நீலம், பச்சை). இந்தச் செல்கள், இவற்றோடு தொடர்புடைய நரம்புச் செல்களுடன் இணைந்து இயங்கி, வண்ணங்களைக் கண்டறிவதற்குப் போதுமான தகவல்களை மூளைக்கு அளிக்கின்றன. மனிதர்களால் 7,000,000 வண்ணங்களைக் காண இயலும். விலங்குகள்? பெரும்பாலான விலங்குகளால் மனிதர்களை விடக் குறைவான அளவிலேயே வண்ணங்களைக் காண இயலும்; ஆனால் சில விலங்குகளால் நம்மை விட அதிகமான அளவிலும் காண இயலும். பறவைகளால் குறைந்தபட்சம் 5 மற்றும் அதிகபட்சம் 7 வண்ணங்களைக் காண இயலும். முதலைகளால் கருப்பு-வெள்ளை மற்றும் சாம்பல் வண்ணங்களை மட்டுமே காண இயலும்.

‘கலர் ப்ளைண்ட்னஸ்’ அல்லது வண்ணங்களைக் காண்பதில் உள்ள குறை என்பது, வண்ணங்களையும், வண்ண பேதங்களையும் காண்பதில் உள்ள குறையைக் குறிக்கிறது. பொதுவாக, வண்ணங்களைக் காண்பதற்கு ரெடினாவில் உள்ள கூம்பு வடிவான ப்ரத்யேக ரிஸப்டார் செல்கள் பயன்படுத்தப்படுகின்றன. மூன்று வகையான கூம்புகள் சிகப்பு, நீலம், பச்சை ஆகிய வண்ணங்களோடு பொருந்தி, நமக்கு பல்வேறு வண்ணங்களைக் காணச் செய்கிறது. இவற்றுள் ஏதாவது ஒரு வகையான கூம்பில் குறையிருந்தாலும், இதனால் ‘கலர் ப்ளைண்ட்னஸ்’ ஏற்படுகிறது. இது ஏறத்தாழ 9 சதவிகித மனிதர்களைப் பாதிக்கிறது. ‘கலர் ப்ளைண்ட்னஸ்’ என்பது நாம் வண்ணங்களைக் காண்பதில் உள்ள குறையாகும். இந்தக் குறை உள்ள ஒருவரால், வண்ணங்களைப் பிரித்தறிவது கடினம்; உதாரணமாக சிகப்பு-பச்சை, மஞ்சள்-நீலம் ஆகிய வண்ணங்களுக்குள் உள்ள வேறுபாட்டை பிரித்தறிவது கடினம். இவற்றுள் சிகப்பு-பச்சை வண்ணக் குறைபாடு, மிகவும் பரவலாகக் காணப்படுகிறது. முழுமையான வண்ணக் குறைபாடு (ஆக்ரொமடோப்ஸியா) என்பது ரெடினாவில் கூம்பு வடிவ செல்கள் முற்றிலும் இல்லாததைக் குறிக்கிறது; இந்நிலை மிகவும் அபூர்வம்.
மனிதர்கள் அனைவருக்கும் பிறக்கும்போது வண்ணக்குறைபாடு உண்டு; ஏனெனில் ஒரு குழந்தையின் நான்காவது மாதத்தில் தான் கூம்பு வடிவான செல்கள் செயல்படத் துவங்குகின்றன. இக்குறைபாடு, ஆண்களில் இருபதுக்கு ஒருவர் என்ற கணக்கிலும், பெண்களில் பல நூறுகளில் ஒருவர் என்ற கணக்கிலும் காணப்படுகிறது. இது ஒரு பரம்பரைத் தன்மை, அதாவது ஒரு மரபணு குறைபாடு. ஆனால் எல்லா குறைபாடுகளும் பரம்பரையைப் பொருத்து அமைவதில்லை. முதுமை, நாம் உட்கொள்ளும் சில மருந்துகள், ரெடினா அல்லது கண் நரம்பு சம்பந்தப்பட்ட நோய் ஆகியவை இதற்குக் காரணமாக அமையலாம்.
பிறவிலிருந்து அமையும் வண்ணக்குறைபாட்டிற்கு சிகிச்சை இல்லை. பின்னாளில் ஏற்படும் குறைபாட்டினை அறுவை சிகிச்சை, மாற்று மருந்துகள், இக்குறைபாட்டினைத் தருவித்த நோயைக் குணப்படுத்துவது போன்றவற்றின் மூலம் குணப்படுத்தலாம். ஆனால், ஒருவருக்கு வண்ணங்களைப் பிரித்தறிவதில் குறை உள்ளதென்றால், அதற்கு ஒரு மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையைப் பெறுவது அவசியம். குழந்தைகளுக்கு சிறிய வயதிலேயே இக்குறையைக் கண்டறிதல், பள்ளியில் அவர்களுக்கு இதனால் படிப்பில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளைத் தடுக்க உதவும்.